புதுடெல்லி, டிச.24-
கட்டாய தேர்ச்சி ரத்து
கடந்த 2009-ம் ஆண்டு, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்து (ஆல் பாஸ்) மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும். யாரையும் ‘பெயில்’ ஆக்கக்கூடாது.
இதற்கிடையே, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து செய்துள்ளது.
2 மாதங்களில் மறுதேர்வு
இதை அரசிதழில் அறிவிப்பாணையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வு முடிவுகள் வெளியான 2 மாதங்களுக்குள் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்.
மறுதேர்விலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டால், அவர்கள் அந்தந்த வகுப்புகளில் மீண்டும் ஒரு வருடம் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது, அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் வகுப்பு ஆசிரியர் வழிகாட்டுதல்களை வழங்குவார்.
3 ஆயிரம் பள்ளிகளுக்கு பொருந்தும்
சம்பந்தப்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு, கல்வி நுணுக்கங்களை அளிப்பார்.
அதே சமயத்தில், எந்த மாணவரும் தொடக்கக்கல்வி வரை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த திருத்தம், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசால் நடத்தப்படும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும்.
மாநில அரசுகளே முடிவு செய்யலாம்
பள்ளிக்கல்வி என்பது மாநில பட்டியலில் இருப்பதால், இந்த திருத்தத்தை பின்பற்றுவது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘ஆல் பாஸ்’ முறை ரத்து முடிவை பின்பற்ற 16 மாநிலங்களும், 2 யூனியன் பிரதேசங்களும் முன்வந்துள்ளன. அரியானா, புதுச்சேரி ஆகியவை இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதர மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ‘ஆல் பாஸ்’ முறையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.